Articles

சோதனைக்குட்படாமல் தேவனுடைய வார்த்தையில் விசுவாசமாயிருப்போம்

எழுதியவர்: சகோதரி ஜெனி


கர்த்தருக்குள் அன்பான சகோதரிகளே!

ஜீவனுள்ளோருக்கெல்லாம் தாயான ஏவாள் பாவத்தில் வீழ்ந்ததுக்கான காரணங்களைக் குறித்து தியானிக்கலாம். தந்திரமுள்ள சர்ப்பமானது ஸ்திரீயை நோக்கி: நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்கவேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ என்று ஒரு கேள்வி எழுப்பி தேவனுடைய வார்த்தையை சந்தேகிக்க செய்தது.

தேவனுடைய கட்டளையை அறிந்த ஏவாள் அதற்கு “நாங்கள் தோட்டத்திலுள்ள விருட்சங்களின் கனிகளைப் புசிக்கலாம்;ஆனாலும், தோட்டத்தின் நடுவில் இருக்கிற விருட்சத்தின் கனியைக்குறித்து, தேவன்: நீங்கள் சாகாதபடிக்கு அதைப் புசிக்கவும் அதைத் தொடவும் வேண்டாம்” என்று சொன்னார் என்றாள்.

அதற்கு சர்ப்பம் நீங்கள் சாவதில்லை, நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப் போல இருப்பீர்கள் என்று ஒரு பொய்யை அவளுக்கு சொன்னது. இதைக்கேட்ட ஏவாள் தேவனுடைய வார்த்தைக்கு முரண்பாடாய் இருக்கிற சர்ப்பத்தின் வார்த்தைக்கு செவிக் கொடுக்காமல் ,ஆதாமிடம் அல்ல தேவனிடம் போய் இதைக் குறித்து விசாரித்து இருக்கலாம்.

ஆனால் அவள் அதை கேட்ட பொழுது ,தேவனுயை அன்பையும், பராமரிப்பையும், ஏதேன் தோட்டத்தின் மேன்மையையும் புறக்கணித்தவளாய் ,சர்பத்தின் பொய்யை உயர்த்தி அந்த விருட்சம் 1.புசிப்புக்கு நல்லதும் 2.பார்வைக்கு இன்பமும், 3.புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து புசித்து,சோதனைக்குட்பட்டு பாவத்தில் வீழ்ந்தாள்.

அன்பான சகாதரிகளே,.

நம்முடைய வாழ்க்கையிலும் பாவத்தில் வீழ்வதற்கான முதல் காரணம் தேவனுடைய வார்த்தையை சந்தேகித்து, விசுவாசியாமல் இருப்பதே (விசுவாசத்தினாலே வராத யாவும் பாவமே. ரோமர்14:23).

இரண்டாவதாக,தேவனுடைய வார்த்தைக்கு முரண்பாடான காரியங்களுக்கு செவிக் கொடுப்பதே,சிந்தையில் இடம் கொடுப்பதே காரணம்.

மூன்றாவதாக நம்முடைய அனைத்து பாவங்களுக்கும் வழிவகுக்கின்ற காரியங்கள் 1 யோவான் 2:16-ல் கூறிய 1.மாம்சத்தின் இச்சை 2.கண்களின் இச்சை 3.ஜீவனத்தின் பெருமை. நம் வாழ்க்கையில் வரும் ஒவ்வொரு சோதனையும் அந்த மூன்று வகைகளில் ஒன்றாகும் - அல்லது ஏவாளின் விஷயத்தைப் போலவே, இவை மூன்றும் ஒரே நேரத்தில் வரலாம். ஜாக்கிரதையாய் நாம் சோதனைக்குட்படாதபடி விழித்திருந்து ஜெபம் பண்ண வேண்டும். தேவனுடைய வார்த்தையை விசுவாசத்தோடு கீழ்ப்படிய தேவன் நமக்கு கிருபை செய்வாராக.