Articles

பேசுவோமா? கர்த்தருடன் பேசுவோமா? - பாகம் 1

எழுதியவர்: தேவஊழியன் நாவாய் மனோகரன்


பரிசுத்த வேதாகமம் கர்த்தர் எங்களுடன் பேசுகின்ற ஒரு மேன்மையான உன்னத கருவியாக இருக்கிறது. ஜெபம் நாம் கர்த்தரோடே பேசுகின்ற ஒரு உன்னத கருவியாக இருக்கிறது. ஒருவர் ஒருவரை அறிந்துகொள்ள வேண்டுமாகில், ஒருவர் ஒருவருடன் நன்றாக பழகவேண்டும்,பேசவேண்டும். ஒருவர் ஒருவருடன் நன்றாக பழகவேண்டும் பேசவேண்டுமாகில், ஒருவர் ஒருவரை ஒழுங்காக அடிக்கடி சந்திக்கவேண்டும். அப்படி அடிக்கடி சந்தித்து பேசி பழகுகின்றபோது ஒருவர் ஒருவரைக் குறித்த தகவல்களையும் அறிவையும் பெற்றுக்கொள்ளமுடியும். ஒருவரைக்குறித்து அறிந்து கொள்ளுவதுக்கூடாகவே அன்பும் உறவும் ஐக்கியமும் ஏற்படும் வளரும். அவ்வாறான உறவே அன்புடன் நிலைத்திருக்கும்.

சிலர் ஒருவரொருவரில் பிரியமாக இருப்பதினால் எப்போதும் சந்தித்துக்கொள்வார்கள். ஆனாலும் ஒருவரொருவருடன்பேசாமல் இருப்பார்கள். இன்னும் சிலர் தங்கள் தனிப்பட்ட சோர்வினாலும் விரக்தியினாலும் கவலைகளினாலும் ஒருவரொருவரை சந்திக்காமலும் பேசாமலும் இருப்பார்கள். இப்படிப்பட்ட உறவுகள் நாளடைவில் வெறுப்பை விரக்தியை அடைந்து பிரிவுக்குள் கடந்து செல்லும், ஊக்கமான அன்பும் உறவும் இல்லாமல் போய்விடும். ஏனெனில் எப்போதும் அடிக்கடி சந்திப்பதும், நன்றாக உரையாடுவதுமே ஒருவர் ஒருவரைக்குறித்த தகவல்களையும், அறிவையும் கொடுக்கும், அந்த அறிவே நல் உறவையும் அன்பையும் நெருக்கத்தையும் இருவருக்குமிடையில் ஏற்படுத்தும்.

அதேபோல் நாமும் அடிக்கடி தேவசமூகமத்தில் வந்து தேவனைச்சந்திப்பதுக்கூடாக, ஜெபத்தில் தேவனுடன் பேசுவதுக்கூடாக, பரிசுத்த வேதாகமத்துக்கூடாக தேவன் எங்களுடன் பேசுவதை கேட்பதுக்கூடாக. தேவனுக்கும் எங்களுக்கும் இடையிலுள்ள அறிவும் உறவும் அன்பும் ஐக்கியமும் வளர்ச்சியடையும் பெலப்படும். ஆக! தேவசமூகத்திற்கு வந்து பரிசுத்த வேதாகமத்தை வாசித்து அவருடைய சித்தத்தை அறிவதும், கர்த்தரிடத்தில் ஜெபித்து எங்கள் தேவைகளை தெரியப்படுத்துவதும், எங்கள் கிறிஸ்தவ வாழ்க்கையில் மிகவும் மிகவும் முக்கியமானது என்பதை மறந்து போகக்கூடாது. இக்கட்டுரைக்கூடாக ஜெபத்தைக் குறித்து படிப்போமாக!

இறைவன் எங்களை நன்றாக தெரிந்தவர் அறிந்தவர், ஆக! எங்களை நன்றாக அறிந்த தெரிந்த அவரிடத்தில் எங்கள் விடயங்களை தேவைகளைத் தெரிவிப்போம் அல்லது தெரிவிக்கவேண்டும் என்பதை தெரிவிக்கிறது.

எப்போதும் எங்கள் தேவைகளை பிரச்சினைகளை எங்களை நன்றாக அறிந்த தெரிந்த ஒருவரிடத்தில் சொல்லி ஆறுதலடைகிறதுபோல் அல்லது தேவைகளை பூர்த்தி செய்வதுபோல் அல்லது நல்லாலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுவதுபோல், எங்களை நன்றாக அறிந்த தேவனிடத்தில் தேவைகளை பிரச்சினைகளை சொல்லி ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளும்படியாக, கவலைகளைச் சொல்லி ஆறுதலடையும்படியாக தேவைகளை தெரிவித்து பூர்த்தி செய்துகொள்ளும்படியாக இறைவனிடத்தில் போகவேண்டுமென்பதை ஜெபம் தெரிவிக்கிறது,உணர்த்துகிறது, கற்றுக்கொடுக்கிறது.

ஏனெனில் இறைவன் எங்களையும், எல்லாவற்றையும் உண்டாக்கி ஆளுகிறவர், எங்களையும் எங்கள் தேவைகள் விருப்பங்கள் எல்லாவற்றையும் அறிந்தவர் தெரிந்தவர், நித்தியர் மாறாதவர் சர்வவல்லமையுள்ளவர், அவர் படைப்புக்கூடாக அதாவது இயற்கைக்கூடாக, எங்கள் அறிவு மனச்சாட்சிக்கூடாக, பரிசுத்த வேதாகமத்துக்கூடாக தம்மை எங்களுக்கு வெளிப்படுத்தியவர், எங்களுடன் பேசுவபவர், சுயவிருப்பம் சுயசித்தமுள்ளவர் பரிசுத்தர் கிருபையுள்ளவர், அன்பு இரக்கம் தயவுள்ளவர், எங்கள் பரம தகப்பனாக இருப்பவர், நாம் அவருடன் பேசுவதை அவரிடத்தில் கேட்பதை விரும்புபவர், அவர் எங்களில் மிகுந்த அன்பும் அக்கறையும் கொண்டவர், அநே க வாக்குத்தத்தங்களை எங்களுக்கு தந்தவர், வாக்குமாறாதவர், அவரின் சித்தத்தின்படி கேட்பவற்றைக் கொடுப்பவர் என்ற இறைவனின் பல மாறாத பண்புகளை ஜெபமானது உணர்த்துகிறது தெரிவிக்கிறது. அவ்வாறான பண்புகளையுடைய தேவனிடத்தில் நாங்கள் விசுவாசமாயிருக்கவேண்டும், அவருடைய சமூகத்திற்கு நாங்கள் எப்போதும் போகவேண்டும், ஜெபிக்கவேண்டும் என்பதை ஜெபமானது வெளிப்படுத்துகிறது.

மேலும் நாம் அவருடைய சித்தத்தின்படி அவருடைய கற்பனைகளைக் கைக்கொண்டு கீழ்படிவுடன் வாழ்ந்தால், நாம் ஜெபத்துக்கூடாக கேட்பதில் எவைகள் அவருக்கு மகிமையையும், எங்களுக்கு பக்திவிருத்தியை நன்மையை ஏற்படுத்தக்கூடியவனவாக இருக்கிறதோ, அவற்றை ஏற்ற காலத்தில் தந்தருள்வார் என்ற நிச்சியத்தை ஜெபம் எங்களுக்கு தெரிவிக்கிறது உணர்த்துகிறது கற்பிக்கிறது. அத்துடன் எங்கள் பரம தகப்பனாகிய இறைவனுடன் நாம் எப்போதும் தொடர்புகொள்ள வேண்டுமென்பதை அவர் விரும்புகிறார் என்பதையும் ஜெபம் நமக்கு தெரிவிக்கிறது உணர்த்துகிறது கற்பிக்கிறது.