Articles

நல்லதோர் குடும்பம் - பாகம் 1

எழுதியவர்: தேவஊழியன் நாவாய் மனோகரன்


திருமணத்தின் ஆரம்பமும் - அமைப்பும்

தேவன் ஆதியிலே வானத்தையும் பூமியையும் உண்டு பண்ணியபோது, மனிதனுக்கு வாழ்விடத்தையும் வாழ்க்கைக்கு வேண்டியவற்றையும் உண்டாக்கினார். தேவன் மனிதனை உண்டாக்கியபோது மனிதனுக்கும் தமக்குமிடையிலே தெய்வீக உறவை ஏற்படுத்தினார், அந்த தெய்வீக உறவை மதம் என்றும் மார்க்கம் என்றும் சமயம் என்றும் மனிதர்களினால் அடையாளம் காணப்படுகின்றது. தேவன் மனிதனை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார் என்னும் போது திருமணத்தை உண்டாக்கினார். தம்பதிகளை, அதாவது கணவன் மனைவி என்ற உறவை ஏற்படுத்தினார். அதுமட்டுமல்ல தம்பதிகளோடும் தெய்வீக உறவையும் தேவன் ஏற்படுத்திக்கொண்டார். ஆக! ஒவ்வொரு மனிதனும் தேவனோடு தனிப்பட்டரீதியாக பரிசுத்த உறவுள்ளவனாக இருக்கவேண்டும். திருமணம் என்ற ஆசீவாதத்தை மனுக்குலத்துக்கு கொடுத்த தேவனோடு பரிசுத்த உறவுள்ளவர்களாக தம்பதிகளாக இணைந்து இருக்கவேண்டும். அது மட்டுமல்ல தம்பதிகளுக்கிடையிலும் பரிசுத்த உறவு எப்போதும் இருக்கவேண்டும்.

தேவன் மனிதனை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கியதினால், திருமணத்தை உண்டாக்கினார் என்பதுமட்டுமல்ல. அந்த திருமணத்தில் ஆணும் பெண்ணுமே இணையவேண்டும் என்ற ஒரு அமைப்பையும் நியதியையும், நித்திய நியதியாக ஒரு அமைப்பாக உண்டுபண்ணினார். ஆணோடு ஆண், பெண்ணோடு பெண் திருமணத்தில் இணைவது தேவ நியதியுமல்ல, தேவன் ஏற்படுத்தின திருமணத்தின் அமைப்புமல்ல, அப்படி இணைவது பாவம் என்பதையே கற்றுக்கொள்ளுகிறோம்.

திருமணத்தின் நோக்கங்கள் - தம்பதிகளின் கடமைகள்

1. தம்பதிகளே ஒருவர் ஒருவரில் அன்பாக இருங்கள்.

“புருஷர்களே உங்கள் மனைவிகளில் அன்பாக இருங்கள்” என்று பரிசுத்த வேதாகமம் சொல்லுகிறது (எபே 5:25,28). மனைவிமார்கள் புருஷன்மாரை அன்புசெய்யக்கூடாதென்று அர்த்தமல்ல, மனைவிமார்களே உங்கள் புருஷர்களை அன்புசெய்யுங்கள் என்பதும் அதன் அர்த்தமாகும். ஏனெனில் எப்படியும், உங்களிலும் அவனவன் தன்னிடத்தில் அன்புகூருவதுபோல, தன் மனைவியினிடத்திலும் அன்புகூரக்கடவன் மனைவியும் புருஷனிடத்தில் பயபக்தியாயிருக்கக்கடவள் (எபே 5:33) என்று சொல்லப்பட்டிருக்கிறது. பயபக்தி என்ற சொற்பதம் அன்பின் பிரதிபலிப்பேயாகும். ஆக! தம்பதிகள் மரணபரியந்தம் வரையிலும் எல்லாச் சூழ்நிலையிலும் ஒருவர் ஒருவரை அன்பு செய்யும்படி திருமண வாழ்விலே தங்களை அர்ப்பணித்திருக்கவேண்டும்.

திருணமண வாழ்விற்கான அன்பு, அறிவு பூர்வமான அன்பாக, நிபந்தனையற்ற அன்பாக, தரமான மாசற்ற அன்பாக, தியாக அன்பாக, சீர்திருத்தப்படுகிற அன்பாக, அர்ப்பணிப்புள்ள அன்பாக இருக்கவேண்டும். இப்படிப்பட்ட அன்பு தம்பதிகளுக்கிடையில் இல்லையென்றால் திருமணவாழ்வும், திருமணவாழ்வின் சந்தோஷமும், உறவின் ஆரோக்கியமும் சீர்குலைந்துவிடும்.

2. அறிவு பூர்வமான அன்புள்ளவர்களாயிருங்கள்.

அறிவு தரவுக்கூடாக வளரும், தரவு ஒருவர் ஒருவரை அறிந்து கொள்ளவதுக் கூடாக வளரும். ஒருவரை அறிந்து கொள்ளவேண்டுமாகில் அவரைக்குறித்த தரவுகளை பெற்றுக்கொள்ளவேண்டும், தரவுகளைப்பெற்றுக்கொள்ள வேண்டுமாகில் ஒருவர் ஒருவரை சந்திக்கவேண்டும் ஒருவர் ஒருவருடன் பேசவேண்டும். சந்திக்கவேண்டும் பேசவேண்டுமாகில் ஒருவர் ஒருவருடன் அதிக நேரம் செலவு செய்யவேண்டும். இல்லை என்றால் ஒருவர் ஒருவரைக்குறித்த அறிவு ஏற்படாது, திருமணவாழ்விற்கேதுவான அன்பு வரவுமாட்டாது வளரவுமாட்டாது.

அறிவற்ற அன்பு பலமற்ற அன்பாக இருப்பதினால் திருமணவாழ்வின் அத்திவாரத்திற்கு போதுமானதாக இருக்காது என்பதில் சந்தேகமில்லை. நல்ல தரவுகளைக் கொண்டு கட்டப்பட்ட அன்பு அறிவு பூர்வமான அன்பாக இருக்கும். அந்த அறிவு பூர்வமான அன்பை கொண்டு கட்டப்பட்ட திருமணவாழ்வே ஆரோக்கியமும் மகிழ்ச்சியுமுள்ளதாகயிருக்கும்.

அறிவு பூர்வமான அன்பில்லாமல் திருமணவாழ்விற்குள் பிரவேசித்தால், அந்த அன்பு வெறும் உணர்வுகளையும் கவர்ச்சிகளையும் தோன்றங்களையும் அதாவது அழகையும் ஆஸ்திகளையும் உத்தியோகங்களையும் பொருட்களையும் பாலியலையும் அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும். இப்படிப்பட்ட அன்பு தோற்றங்கள் கவர்ச்சிகள் அழகு பொருளாதார நிலைமைகள் மாறுகிறபோது மாறிவிடும். இவ்வாறாக மாறுகின்ற அன்பு திருமணவாழ்வின் மகிழச்சியையும் மாற்றிவிடும், திருமண உறவின் ஆரோக்கியத்தையும் கெடுத்துவிடும்.

திருமணத்திற்கு முதல் ஒருவர் ஒருவரை அறிகிற சந்தர்ப்பங்கள் கிடைக்குமாக இருந்தால், படிப்புக்களை முடித்து, திருமணவயதாகிறபோது, பெற்றோர்களின் சம்மதங்களை அனுமதியை ஆதாயப்படுத்தினவர்களாக, பெற்றோர்கள் பெரியோர்கள் சபையோர் முன்னிலையில், தேவபயத்துடன் திருமணத்துக்கு முன்பாக பாலியல் உறவுகளில்லாமல் நல்ல உரையாடல்கள் உபசரிப்புக்களுக்கூடாக ஒருவர் ஒருவரை அறிந்து திருமணத்துக்குள் பிரவேசிக்கவேண்டும்.

திருமணத்துக்கு பின்பும் ஒருவர் ஒருவருடன் இன்னும் அதிக நேரங்களை செலவு செய்து, இன்னும் அதிகம் அதிகமாக எல்லா வகையிலும் ஒருவர் ஒருவரை அறிந்து, திருமண வாழ்வின் ஆரோக்கியத்துக்கான, மகிழ்ச்சிக்கான அறிவு பூர்வமான அன்பை மரணபரியந்தம் வரையிலும் கட்டி வளர்ப்பது மிகவும் அவசியமானது.

3. நிபந்தனையற்ற அன்புடையவர்களாயிருங்கள்.

நிபந்தனையற்ற அன்பு திருமண வாழ்வை நிலைத்திருக்கப்பண்ணும். தம்பதிகளில் ஒருவர் இருக்கிற பிரகாரமாக அவரை நேசிப்பதே நிபந்தனையற்ற அன்பாகும்.உதாரணமாக இயேசுவின் அன்பை எடுத்துக்கொள்ளலாம். இயேசு நாங்கள் இருக்கிற பிரகாரமாக எங்களை முதலில் அன்பு செய்தார். நாம் பாவிகளாக இருக்கையில் அருவருக்கப்படத்தக்கவர்களாக இருக்கையில், விரும்பப்பட எந்த தகுதியுமற்றவர்களாக இருந்தபோதும் நிபந்தனையற்ற விதத்தில் எங்களை நேசித்தார். அப்படி அன்பு செய்கிற ஒருவரை மகிழ்விக்கவும் அவருடைய எதிர்பார்ப்புக்களை ஆசைகளை நிறைவேற்றவும் அவருக்கு கீழ்படியவும் நாம் பிரயாசைப்படவேண்டும். அதேபோல் தம்பதிகளில் ஒருவர் ஒருவரை நிபந்தனையற்ற முறையில் அன்பு செய்யவேண்டும். மாறாக ஆரோக்கியமாயிருந்தால் நிறமாயிருந்தால் நலிந்துமெலிந்து அழகாயிருந்தால், என்னை நன்றாக நேசித்தால் உபசரித்தால் மட்டுமே உம்மை நேசிப்பேன் என்று சொல்லுவோமாயிருந்தால் நிபந்தனைகளாகும், நிபந்தனையுள்ள அன்பாகிவிடும். திருமணவாழ்வில் தம்பதிகளாக இணைந்த பிற்பாடு நிபந்தனையற்ற முறையில் அன்பு செய்யும் அன்பே திருமணவாழ்வின் மகிழ்ச்சிக்கு அவசியம் என்பதை மறந்துபோகக்கூடாது.

நிபந்தனையற்ற அன்பு எப்போதும் தியாகமுள்ள அன்பாகவே இருக்கும். உதாரணமாக நிபந்தனையற்ற முறையில் எங்களை அன்பு செய்த இயேசு கிறிஸ்து எங்களை பாவத்திலிருந்து இரட்சிக்கும்படியாக தம்மைத்தாமே சிலுவையிலே தியாகம்பண்ணினார். தம்மை ஜீவபலியாக ஒப்புக்கொடுத்தார். இதுதான் தியாக அன்பு. கிறிஸ்து நமக்காகத் தம்மைத் தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள். (எபே 5:2) இவ்வாறாக தன் துணை வரை அவர் இருக்கிறபிரகாரமாக அன்புசெய்கிற கணவனோ மனைவியோ தனது துணைவருக்காக நேரத்தை ஆஸ்தியை தாலந்துக்களைமட்டுமல்ல தன்னையே தியாகம் செய்கிறவறாகவும் இருப்பார். அதுதான் தியாக அன்பு.

4. சீர்படுத்தப்படுகிற அன்புள்ளவர்களாயிருங்கள்.

அன்பில் கலக்கங்கள் கவலைகள் ஏற்படுகிறபோது, அதனிமித்தம் கவலைப்பட்டு திருமணவாழ்வின் மகிழ்ச்சியை ஆரோக்கியத்தை சீர்குலைந்து விடாதபடிக்கு, அல்லது ஒருவர் ஒருவரைவிட்டுப் பிரிந்துபோகாதபடிக்கு, கலகங்களுக்கும் கலக்கத்துக்கும் கவலைக்கும் ஏதுவான காரணங்களை பிரச்சிகைளளை அடையாளம் கண்டு அவற்றை சீர்படுத்தவும், ஒருவர் ஒருவருடன் சீர்பொருந்தவுமே தம்பதிகள் பிரியப்படுவார்கள். தங்கள் தவறுகளை உணர்வார்கள், அதனிமித்தம் மனந்திரும்புவார்கள், மன்னிப்புக்கேட்பார்கள் மன்னிப்பார்கள் தவறுகளை மறப்பார்கள். ஆதி அன்பை விட்டுவிடாதபடிக்கு தங்களையும் திருமண வாழ்வின் மகிழ்ச்சிக்கேதுவான அன்பையும் சீர்படுத்தி, ஒருவரொருவருடன் சீர்பொருத்திக் கொள்ளுவார்கள். இதுதான் சீர்திருத்தப்படுகிற அன்பாகும். நீங்களெல்லாரும் ஒரே காரியத்தைப் பேசவும், பிரிவினைகளில்லாமல் ஏகமனதும் ஏகயோசனையும் உள்ளவர்களாய்ச் சீர்பொருந்தியிருக்கவும் வேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன். (1கொரி 1:10)

5. அர்ப்பணிப்புள்ள அன்புள்ளவர்களாயிருங்கள்.

நாம் அருவருக்கப்படத்தக்கவர்களாக இருந்தபோதே, நாம் அன்பு செய்யப்படுவதுக்கு எந்த தகுதியும் இல்லாதிருந்தபோதே தேவன் எங்களை நேசித்தார். எங்களை நேசிக்க அர்ப்பணித்தார். இவ்வாறு அறிவு பூர்வமான முறையில், நிபந்தனையற்ற முறையில், தியாகத்துடன் சீர்பொருந்தத்தக்க முறையில், தரமான மாசற்ற அன்பை நடைமுறைப்படுத்தத்தக்க முறையில், தம்பதிகள் தங்களை அர்ப்பணிக்கவேண்டும். அதுதான் அர்ப்பணிப்புள்ள அன்பாகும். சரீர அழகு மாறினாலும், தோன்றங்கள் மாறினாலும், உத்தியோகங்கள் வருமானங்கள் பொருளாதார நிலைகள் மாறினாலும், வியாதியானாலும் மரணபரியந்தம், தம்பதிகளாக இணைந்து இசைந்து பிரியாமல் வாழ அர்ப்பணிக்கப்பட்ட அன்பே, திருமண வாழ்விற்கு சந்தோஷத்திற்கும், ஆரோக்கியத்துக்கும் மிக அவசியம்.

ஆக! திருமணவாழ்விலே ஒருவர் ஒருவரை அன்பு செய்வது திருமண வாழ்வின் நோக்கங்களில் ஒன்றாக இருப்பதால். அன்பான தம்பதிகளே! மரணபரியந்தம் ஒருவர் ஒருவரை நேசிக்க திருமணவாழ்விலே அர்ப்பணிப்போமாக.